சரஸ்வதியைப் பற்றி நான் எழுதிய வெண்பா:
விநாயகர் துதி
வாரணத் தோற்றம் பெரும்வயிறு நல்வினையின்
காரணம் என்றிவை கொண்டெவரும் – ஆர
மகிழ்விக்கும் நற்பிள்ளாய் நாமகள்அந் தாதி
அகிலத்தில் ஓங்கநின் காப்பு
நூல்
1. பாருக் குழைத்திடும் பேறும் உயிர்மூச்சு
தீரும் வரைப்பாடும் நற்புலமும் – சோரும்
மடிநீக்கும் வீறும் அளித்திடுவாய் வாணி
அடிசேர்ந்தேன் நின்னைப் பணிந்து.
2. பணிவார்க் கருள்செய்யும் பாமகளை என்பா
அணிசேர்த் தினித்திருக்க வேண்டி – மணிவிழியால்
பார்த்தருளச் செய்யப் பணிக்கின்றேன் பைந்தமிழில்
ஆர்த்தெழுக எந்தன் கவி.
3. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்
குவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்
தானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்
தேனாகி நிற்பாய் உவந்து.
4. உவகை தனைக்கூட்டும் உத்தமியே பண்ணும்
நவரச பாவமும் நல்கு – தவறாமல்
நின்புகழ் பாடிநற் கைமாறு தானாற்றி
நன்றி நினைவேன் விழைந்து.
5. விழைவும் வெறுப்பும் புலன்மயக்கம் ஐந்தும்
பிழைசேர் மலக்கழிவு மூன்றும் – கழைவதும்
ஞான விழிதிறந்து பார்ப்பதும் வேண்டும்நீ
தானம்செய் தாயே இரங்கி.
6. இரக்கப் பெருங்குணமும் ஈனச் செருவைக்
கரங்கோர்த் தணைக்கும்பண் பாடும் – பரப்புமிகு
பூவாழ் உயிர்க்கருளும் பக்குவமும் தாவெந்தன்
நாவாழ் முருகே எனக்கு.
7. எனக்குரிமை பூண்டதென எண்ணும் செருக்கும்
மனங்கொல்லும் காமக் கனலும் – சினச்சேறும்
அண்டாமல் தானென்னைக் காப்பாய் ஒளிர்பவளே
வெண்டா மரைமேல் உறைந்து.
8. உறைவதும் பூமேல் மறைவதும் ஏற்றுச்
சிறைபட்டேன் ஒன்பதுவாய்க் கூட்டில் – மறைபொருளே
ஓங்கும் இயலிசைக் கூத்துமெய் ஞானம்தா
தூங்காதே இன்றேல் விழி.
9. விழிவாங்கும் காட்சி அனைத்தும்பொய் யாக
வழிகாட்டும் கல்வியினை மெய்யாய் – எழிலதுவாய்த்
தேர்ந்தேன்நான் அவ்வழியாச் செல்வத்தை எந்தாயே
சேர்ந்துவிடச் செய்வாய் விரைந்து.
10. விரைந்துவரும் நெஞ்ச உணர்ச்சிவெள் ளத்தை
உரைக்கின்ற நன்னெறியாம் பாவை – வரைமட்டம்
போகும் உயரத்தில் நான்பாட வொண்ணுமோ
ஆகுமோ வாணி புகல்.
11. புகலாயோ நன்நெஞ்செ நல்லறிவின் வேறு
பகலவனை நேர்க்குமொளி உண்டோ – இகல்செய்து
சொல்லோ டடர்த்தேன் கலைமகளே சொல்லிற்கு
வல்லோனாய் ஆக்கென்னைச் சேர்ந்து.
12. சேர்க்கைபின் ஊடல் இவையில்லாக் காதல்போல்
ஆர்க்காத நெஞ்சும் கசக்குமடி – பார்க்கவெனைப்
பாமகளே என்னுள்ளம் ஆர்க்கும் கவியிலுன்
நாமத்தைப் பாடும் பொழுது.
13. பொழுதும் பிறவியும் பல்யுகமும் சென்றும்
அழுகாத நற்புலம் வேண்டும் – தொழுதுன்னை
ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பேன் என்னம்மா
தேயுமோ உண்மை அறிவு.
14. அறிவின் விருட்சத்து வேரே அணியே
பொறியைந்தின் வேட்கை விடுத்து – நெறிவாழ
நின்னைச் சரணடைந் தேனடியேன் ஞாலத்தில்
என்னைநீ செய்வாய் தலை.
15. தலைகாக்கும் என்பர் தருமம் அதுவென்
கலைகாக்கச் செய்வாய் இறையே – விலையாக
ஆசு மதுரவித் தாரகவி சித்திரமிக்
காசுகள் நான் தருவேன் வென்று.
16. வென்றென் மனதை ஒருநிலை ஆக்கிடவே
இன்றுளம் கொண்டே முனைந்தென்யான் – நின்றுறைந்து
எங்கும் பரவியநற் பேரொளியே அத்தனையும்
மங்கல மாக்கு மகிழ்ந்து.
17 . மகிழ்ந்து மடையர்போல் பேசிப் பிதற்றி
அகிலத்தின் பொய்யில் மயங்கி – உகிர்போலத்
தீமை வளர்த்துத் திரியேன்நான் பற்றிடுவேன்
ஊமைக்கும் ஈவாளின் தாள்.
18. தாள்பற்றிச் சேவிப்போர்க் கன்போ டருள்நல்கி
ஆள்வதுவுன் பன்னாள் வழக்கமன்றோ – தேள்போல
என்னை வருத்துமிடுக் கண்நீக்கென் தாயேநான்
பொன்வேண்டேன் வேண்டும் கவி.
19. கவிமாரி என்வாய் பொழியவும் ஆழிப்
புவியெலாம் செல்லவும் வேண்டும் – செவிதீட்டிப்
பல்லோர் திரளட்டும் பாவரங் கேரட்டும்
சொல்மகளெ தாயிவ் வரம்.
20. வரமீந்து வாழ்விக்கும் தாயேநல் வீணைச்
சுரமீதில் ஏறிவரும் ஊற்றே – சிரமீது
நீள்கரம் கூப்பினேன் நன்றமிழ்ச் சொல்லெனும்
வாள்தனைத் தாநீ எடுத்து.
21. எடுத்துக் கொடுப்பின் அடிமுதலை நின்பால்
தொடுத்திடுவேன் பாமாலை கோடி – துடுப்பீவாய்
தொன்தமிழ் ஆழியை நீந்திக் கடப்பேன்யான்
மன்றாடிக் கேட்டேன் புலம்.
22. புலம்கொண்ட பாவலர் பல்லா யிரம்பேர்
துலங்கினரே நானிலத்தில் பண்டு – நலங்குன்றி
நாநலம் கெட்டான் மனிதன் கலைவாணி
தாநலம் என்சொல்லில் இன்று.
23. இன்றுடன் வாழ்கின்ற ஈடிலாச் செல்வந்தான்
நின்று நிலைக்காது நாளையில் – என்றைக்கும்
வாழ்வில் துணைநிற்கும் கல்வி அதைத்தருவாய்
தாழ்த்துவமே தாய்முன் சிரம்
24. சிரஞ்சூடிச் செல்லல் சிறப்பன்று நெஞ்சில்
உரஞ்சூடிச் செல்லல் சிறப்பு – சுரவனத்தில்
தோன்றுநன் நீரனையாய் தாவுள்ளத் திண்மையோ
டான்றோரும் ஏத்தும் புகழ்.
25.புகழொழுக்கம் நெஞ்சத் துறுதி மகிழ்ச்சி
திகழ்ந்தொளியை வீசும் கவிதை – பகலிரவு
மாறிடினும் மாறாநன் நெஞ்சம் இவைதருவாய்
ஏறிடுவேன் வெற்றிப் படி.
One thought on “நாமகள் அந்தாதி”